BREAKING NEWS:-
Search

வாழ்வை மேம்படுத்தும் வாசிக்கும் கலை!

இந்த  தொகுப்பானது மார்டிமர் ஜே.அட்லர் மற்றும் சார்லஸ் வான் டோரென் இணைந்து எழுதிய ‘ஹௌ டு ரீட் எ புக்’ என்னும் புத்தகத்தை, புத்தகங்களை எப்படிப் புத்திசாலித்தனமாக படிப்பது என்பதைச் சொல்கிறது இந்த புத்தகம்.

இந்தப் புத்தகம் ஏற்கெனவே பல்வேறு புத்தகங்களைப் படித்துவரும் வாசகர்களுக்காகவும், இனிமேல் புத்தகங்களைப் படிக்கலாம் என்று நினைக்கும் எதிர்கால வாசகர்களுக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, படிப்பதின் மூலம் நிறைய புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகத்தான் இந்தப் புத்தகம் என்றுகூட சொல்லலாம்.

தொலைக்காட்சி, ரேடியோ, யூடியூப் என்பதெல்லாம் வருவதற்குமுன் செவிவழிச் செய்தியாக பல விஷயங்கள் கேட்டு அறிந்து கொண்டோம். அந்தக் காலத்திலும் படிப்பது புரிதலையும் அறிவையும் வளர்க்கும் என்று உணர்ந்து பலரும் புத்தகங்களைப் படித்தே வந்தனர். நமது மற்ற வேலைகளைச் செய்துகொண்டே ரேடியோவின் மூலம் பல்வேறு கருத்துக்களைக் கேட்க முடிகிறது.

என்னதான் அதி நவீன இண்டர்நெட் சார்ந்த சாதனங்கள் வந்துவிட்ட போதிலும், புரிதலும் அந்தப் புரிதலினால் ஏற்படும் செயல்பாடுகளும் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் கிடைக்கிற அளவுக்கு வேறெந்த வகையிலும் கிடைப்பதில்லை என்கின்றன ஆய்வுகள்.

ஏனென்றால், இந்த வகை மீடியாக்கள் சிந்திப்பது என்ற ஒன்றே தேவையில்லை என்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன. உலக விஷயங்களை எல்லாம் வெகு சிம்பிளாக புரிய வைக்கிறேன் பேர்வழி என்று இந்த வகை டிஜிட்டல் ஊடகங்கள் கிளம்பிவிடுகின்றன. இந்த வகை போதனைகளும் இன்டர்வியூக்களும், ஒளிபரப்புகளும் ஒருவர் ஒரு விஷயம் குறித்து இதுதான் சரி என்று மூளையைத் தயார் செய்து கொள்ள உதவுகிறதே தவிர, சிந்தனையை வளர்த்துக்கொள்ள உதவுவதில்லை. அதாவது, பார்ப்பவரையும் கேட்பவரையும் சிந்திக்கத் தூண்டாமல் ஒன்றை சரி என்று நம்பவைப்பதையே இந்த வகை காட்சிப்படுத்துதல் கொள்கையாகக் கொண்டு உள்ளது.

இப்படி சரியென்று நம்பவைக்கப்படும் விஷயங்கள் ஒரு சிடி அல்லது கேஸட்டைப் போன்றது. நாமாக சுய சிந்தனை இல்லாமல் எங்காவது அந்த விஷயம் நமக்குத்தேவைப்படும்போது அந்த சிடியைப் போட்டு ஒலி/ஒளிபரப்பிக் கொள்கிறோம். எந்த விஷயம் குறித்தும் சிந்திக்கத் தேவையில்லை என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக நாமே நம்ப ஆரம்பித்து விடுகிறோம்.

வாசிப்பு என்பது ஒரு சுறுசுறுப்பான (ஆக்டிவ்) நடவடிக்கை. அதனால் வாசிப்பில் சுறுசுறுப்பு என்பது அவசியமாகிறது. சும்மா தேமே (பாசிவ்) என்று படிப்பதினால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. கண்ணை நிலைநிறுத்தி, மூளையை தூங்கச் செய்தபின் நம்மால் படிக்க முடியாது அல்லவா? ஒருவர் நம்முன்னே இருந்து பேசுகிறார். அவர் பேசுவதைக் கேட்கவும் அவர் சொல்வதற்கு பதில் கருத்துக்களைச் சொல்லவும் நாம் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது இல்லையா?

அது போல்தான் புத்தகமும், பேசுபவர் எப்படி நம்மை நோக்கி கருத்துகளை அனுப்புகிறாரோ, புத்தகங்களும் நாம் படிக்கும்போது நம்மை நோக்கி கருத்துக்களை அனுப்பவே செய்கின்றன. அவற்றினை கிரகித்துக்கொள்ள நாம் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

படிப்பதில் இரண்டு பெரிய பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று தகவல்களுக்காகப் படிப்பது. மற்றொன்று, புரிதலுக்காகப் படிப்பது. உங்களுக்கென்று மூளையும் மனதும் தனியாக உள்ளது. நீங்கள் படிக்கும் புத்தகம் அதை எழுதிய நபரின் மூளைக்கும் மனதுக்கும் பழக்கப்பட்ட வார்த்தைகளின் கோர்வையில் எழுதப்பட்டிருக்கும். புத்தகத்தை எழுதியவர் சொல்ல வருவதை முழுவதுமாகப் புரிந்துகொள்ள நீங்கள் எந்த அளவு அவருடைய வார்த்தைகள் கோர்க்கும் முறையை நெருக்கமாக சென்றடைகிறீர்களோ, அந்த அளவு அவர் சொல்ல நினைத்த கருத்தை முற்றிலுமாக உனர்ந்து கொள்ள முடியும்.

இதை ஓரு உதாரணத்துடன் பார்ப்போம். ஒரு புத்தகத்தைப் படிக்கிறீர்கள். அதன் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்போது உங்கள் மனது ரொம்பவும் குதூகலித்து ‘அட, சூப்பராக சொல்கிறதே’ என்று வியக்கிறோம். இந்த வகை வாசிப்பில் நீங்களும் ஆசிரியரும் ஒரே தளத்தில் நிற்கிறீர்கள். சொல்ல வந்ததும், படித்துப் புரிந்ததும் ஏறக்குறைய ஒரே அளவில் இருக்கிறது.

மாறாக, புத்தகத்தைப் படிக்கும்போது ஆதி முதல் அந்தம் வரை ஒன்றுமே புரியவில்லை என்று நீங்கள் நினைத்தால், எழுதியவரும் நீங்களும் வெவ்வேறு மனோநிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இன்னும் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். நீங்கள் படிக்கும் புத்தகம் எதையோ சொல்ல வருகிறது என்று உங்களுக்குத் தெரிகிறது. உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்கிறபோது, அந்தப் புத்தகத்தை உங்கள் நட்பு வட்டாரத்தில் அதிகம் படிக்கிற ஒருவரிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். நீங்கள் புரிந்துக்கொள்ளத் தவறிய விஷயத்தை அவர் சொல்லிவிடுவார்.

ஒரு புத்தகத்தை புரிந்துகொள்வது, அதிகப்படியாகப் புரிந்து கிரகித்துக்கொள்வதும் இரண்டுவிதமான படிநிலைகளாகும். இந்தப் புத்தகத்தைப் படிப்பதன் மூலம் எந்தவித அயலார் மற்றும் டூல்களின் உதவியும் இன்றி அனைத்து வகையான புத்தகங்களையும் அந்தப் புத்தகம் சொல்ல நினைக்கும் உயரிய நிலையிலேயே புரிந்து கொள்ள முடியும் எனலாம்.

வாசிப்பில் மூன்றுவகை இருக்கிறது. அடிப்படை வாசிப்பு என்பது ஒருவகை. ‘த கேட் சேட் ஆன் த ஹேட்’ என்பது போன்ற குழந்தைகளின் வாசிப்பு அது. பூனை எங்கே உட்கார்ந்தால் என்ன, வார்த்தையைப் படிக்க முடிகிறதா என்பதுதான் இங்கே முக்கியம்.

அடுத்த வகை படிப்பு ஆராய்தறிவதற்கானது. (இன்ஸ்பெக்‌ஷனல் ரீடிங்). இந்த இரண்டாம் வகையே உண்மையான வாசிப்பு வகையைச் சாரும். மூன்றாம் வகை வாசிப்பு என்பது பகுப்பாராய்ச்சி (அனலிடிகல் ரீடிங்) செய்யும் வாசிப்பு.

இந்த வாசிப்பு ஒவ்வொன்றும் ஒரு படிநிலை. ஒன்றை சிறப்பாக முடிக்காமல், அடுத்த படிநிலைக்கு நம்மால் செல்ல முடியாது.

சிறப்பாக வாசிப்பதற்கான பல்வேறு வழிமுறைகளும் விதிமுறைகளும் இருக்கின்றன. இந்த விதிமுறைகளைத் தெரிந்து வைத்துக் கொண்டால் மட்டும் நாம் சிறந்த வாசிக்கும் நபராக மாறிவிட முடியாது. வாசிப்பு என்பதை தொடர்ந்து நாம் நமக்கு பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே நம்மால் சிறந்த வாசிக்கும் நபராக உருவெடுக்க முடியும். பழக்கப்படுத்திக் கொள்ளுதல் என்பது சற்று சிரமம்தான்.

வாசிக்கும் பழக்கத்தை எப்படி வளர்த்துக் கொள்வது, புத்தகங்களை எப்படி வகைப்படுத்திப் பிரிப்பது, புத்தகத்தின் தலைப்பை வைத்து அது எதைச் சொல்ல வருகிறது என்பதை எப்படி புரிந்துகொள்வது, புத்தகத்தை எக்ஸ்ரே எடுப்பது போல படிப்பது எப்படி, புத்தகத்தை எஔதியவரின் எண்ணத்தை எப்படிக் கண்டறிவது, புத்தகத்தில் உள்ள முக்கிய வாசகங்களை எப்படிக் கண்டுபிடிப்பது, புத்தகத்தில் உள்ள தர்க்கரீதியான கருத்துக்களை எப்படி கண்டறிவது என்பதை விளக்கமாக எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

அதுமட்டுமல்ல, படித்து முடிக்கும் முன்னரே ஒரு முடிவைச் செய்துவிடாமல், முடிக்கும் வரை எப்படிப் பொறுமையாக வாசிப்பது, பிராக்டிக்கலான புத்தகங்களை எப்படி படிப்பது, கற்பனை புனைவுகளை எப்படிப் படிப்பது, கதை/நாடகம்/கவிதைப் புத்தகங்களை வாசிப்பது, வரலாற்றுப் புத்தகங்களை எப்படி வாசிப்பது, வாழ்க்கை வரலாறு மற்றும் சுயசரிதைகளை எப்படிப் படிப்பது, அறிவியல் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்ட புத்தகங்களை எப்படி வாசிப்பது போன்ற பல வாசிக்கும் கலைகளை விரிவாகச் சொல்லியுள்ளது இந்தப் புத்தகம்.

புத்தகங்களைப் படிப்பதினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்கலாம்.

நன்றி

நாணயம் விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *