BREAKING NEWS:-
Search

மைக்ரோ சிப் உற்பத்தியை நிறுத்த உள்ள டோஷிபா நிறுவனம்..!

ஒரு காலத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்தியின் தாயகமாக திகழ்ந்த ஜப்பான், தற்போது சீனா மற்றும் தென்கொரிய நிறுவனங்களின் வளர்ச்சியால் அந்த சிறப்பை இழந்து வருகிறது. மற்ற நாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால்,  சமீப காலமாக சோனி, டோஷிபா போன்ற முன்னணி மின்னணு நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் டோஷிபா நிறுவனம் தனது மைக்ரோ சிப் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மைக்ரோ சிப் விற்பனையில் தொடர்ந்து இழப்பை சந்தித்து வந்ததால், டோஷிபா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் உள்ள டோஷிபா,  சில மாதங்களுக்கு  முன்னர் தனது நிறுவனத்தை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்தது. ஆனால் தற்போது வரை அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் வெஸ்டர்ன் டிஜிட்டல் நிறுவனத்துடன் இணைந்து  ‘மைக்ரோ சிப்’-களை டோஷிபா தயாரிக்க துவங்கியது. ஆனால் மைக்ரோ சிப் விற்பனை தொடர்ந்து மந்த நிலையில் இருப்பதால், அதன் உற்பத்தியை நிறுத்த இரு நிறுவனங்களும் முடிவெடுத்துள்ளன.

டோஷிபா நிறுவனத்தைப் போலவே, பிரபல சோனி நிறுவனமும் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:www.toshiba-memory.com




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *