BREAKING NEWS:-
Search

தனிக்கணினி இணைய பயன்பாட்டை முந்திய திறன் பேசிகள்..!

கடந்த பத்து வருடங்களாக திறன்பேசிகள் பயன்பாடு, டெஸ்க் டாப் எனப்படும் தனிக்கணினிகளின் பயன்பாட்டில் சரிவை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் தனிக்கணினிகளில் மட்டுமே பயன்படுத்தத்தக்க தங்கள் இணையதளங்களை, எளிதாக திறன்பேசியில் உபயோகப்படுத்தும் வகையில் மாற்றி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில், முதன் முறையாக கடந்த அக்டோபர் மாதம் திறன்பேசிகள் மற்றும் டேப்லெட்டுகளின் வழியாக நடைபெறும் இணைய பயன்பாடு, தனிக்கணினிகள் வழியாக நடைபெறும் இணையப்பயன்பாட்டை முந்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி வர்த்தகங்கள் அனைத்தும் திறன்பேசிகளை சார்ந்து சென்று வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதன்முறையாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஸ்டார் கவுண்டர் என்ற நிறுவனம் எடுத்துள்ள இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகம் முழுவதும் 48.7 சதவீதம் பேர் தனிக்கணினிகள் மூலமாக இணையத்தை பயன்படுத்துவதாகவும், மீதமுள்ள பயனாளர்கள் தங்கள் திறன்பேசி வழியாகவே இணையத்தை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தனிக்கணினி மூலமாகத்தான் இணையம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 58 சதவீதமும், இங்கிலாந்தில் 56 சதவீதமும் தனிக்கணினி மூலமாகத்தான் இணையம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் உலக அளவில் பார்க்கும் போது திறன்பேசிகளே முதலிடம் பிடித்துள்ளன.

குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் திறன்பேசிகளில் இணையம் பயன்படுத்தும் அளவு வேகமாக அதிகரித்து வருவதாகவும், இன்னும் சில மாதங்களில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் திறன்பேசி இணையப் பயன்பாடு, தனிக்கணினிகளின் இணையப் பயன்பாட்டை முறியடிக்கும் எனவும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திறன்பேசி வழியாக இணையம் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை கடந்த 2009-2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில்தான் அதிகரித்துள்ளதாகவும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:http://tecake.in/news/tech/usage-mobile-internet-outrivals-desktop-first-time-25482.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *