BREAKING NEWS:-
Search

சங்க கால மக்களின் வாழ்க்கை முறை..!

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த கானவர், குறவர், குறத்தியர் வில்லும் அம்பும் கொண்டு வேட்டையாடினர். விலங்குகளின் தோலை ஆடையாக உடுத்தினர்; பெண்கள் தோலினையும் தழையினையும் மரப்பட்டைகளையும் உடுத்தினர். மலையில் விளையும் ஐவனம் என்னும் மலைநெல், தினை, மூங்கிலரிசி போன்றவற்றை உணவாகக் கொண்டனர். தேன்கூட்டை யழித்துத் தேனெடுத்தனர். கிழங்குகளை அகழ்ந்தெடுத்து உணவாக உண்டனர். பெண்கள் பரண்களில் அமர்ந்து கிளியோட்டினர். மழை பெய்வதனால் வரும் மலையருவி நீரும், சுனை நீரும் உண்டனர். தேக்கு, வேங்கை, கொங்கு, சந்தனம், அகில் போன்ற மரங்கள் மலைச்சாரலில் அடர்ந்து வளர்ந்தன. குறிஞ்சியில் புலி, யானை, கரடி, பன்றி போன்ற விலங்குகள் மக்களுக்கு இடையூறுகளாக விளங்கின. மக்கள் வேங்கை, குவளை போன்ற மலரைச் சூடினர். சிற்றூர்கள் எனப்படும் ஊர்களில் வாழும் இம்மக்கள் தொண்டாகப் பறையறைந்தனர்; குறிஞ்சி யாழில் குறிஞ்சிப் பண்ணையும் இசைத்துப் பாடினர். சேயோன் என்னும் தெய்வத்தை வணங்கினர்.

முல்லை நிலத்தில் வாழ்ந்த இடையர், பொதுவர், ஆயர், ஆய்ச்சியர் இயற்கையோடு இயைந்து குடும்பம் குடும்பமாக ஒன்று சேர்ந்து பாடி, சேரி, பள்ளி என அழைக்கப்படும் பகுதிகளில் வாழ்ந்தனர்.

இயற்கையினை நம்பி மழையினை எதிர்பார்த்து வரகு, சாமை, கொள்ளு, கடலை, அவரை, துவரை ஆகியவற்றைப் பயிரிட்டனர். ஆடுமாடுகளை மேய்த்து அவற்றின் பால், தயிர், மோர், நெய் முதலியவற்றை உணவுப் பொருள்களோடு உண்டனர். மருதநிலப் பகுதிகளுக்குச் சென்று பால், தயிர், நெய் போன்றவற்றைக் கொடுத்துப் பண்டமாற்றாக நெல் முதலிய பொருள்களைப் பெற்றனர். காலையில் ஆடுமாடுகளைக் காடுகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு ஓட்டிச் சென்ற ஆயர்கள் மாலையில் ஆடு மாடுகளுடன் குழலூதிக் கொண்டு வீடு திரும்பினர். மானும் முயலும் வாழ்ந்த அந்நிலத்தில் காட்டுக்கோழியும் புறாக்களும் மிகுந்து விளங்கின. கொன்றையும், குருந்த மரமும் செறிந்து விளங்கிய அப்பகுதியில் பெண்கள் முல்லை, பிடவு போன்ற மலர்களைத் தங்கள் குழலில் சூடினர். காட்டாற்று நீரையும், குளங்களையும் உடைய அப்பகுதி மக்கள் ஏறுகோட்பறை அறைந்தனர். முல்லை யாழில் சாதாரிப் பண்ணை இசைத்தனர். மாயோனைத் தெய்வமாகக் கொண்டு வழிபட்டனர்.

ஆற்றங்கரைகளை அடுத்து வாழ்ந்த மருதநில உழவர், உழத்தியர் ஆற்றுநீரைத் தேக்கி வயல்களுக்குப் பாய்ச்சி நெல் விளைவித்தனர். காடு கொடுத்து நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கிய இவ்வுழவர் வாழ்ந்த இடங்கள் ஊர், பேரூர் என வழங்கப்பட்டன. எருமையும், நீர்நாயும் விலங்குகளாக வாழ்ந்த இப்பகுதியில் அன்னமும், அன்றிலும், நீர்கோழியும் பறவைகளாக விளங்கின. மருத மரமும், வஞ்சி, காஞ்சி ஆகிய மரங்களும் செழித்து வளர்ந்த இப்பகுதியில் தாமரையும், செங்கழுநீர் மலர்களும் பூத்துக்குலுங்கின. நெல்லரிப் பறை முழங்கிய இம்மக்கள் மருத யாழை இசைத்தனர். வேந்தனைத் தெய்வமாகக் கொண்ட இம்மக்களின் வாழ்வில் உழவும் தொழிலும் வளர்ச்சி அடைந்தன. அறிவும் பண்பும் சிறந்த கலைகள் போற்றப்பட்டன. சிற்றூர்கள் பல சேர்ந்து பேரூர்கலாகச் சிறப்புற்றன. பேரூர்கள் நகரங்கள் எனப்பட்டன. நகர வாழ்க்கையின் அடிப்படையில் நாகரிகம் தோன்றியது.

கடற்கரையில் வாழ்ந்த பரதவர், நுளையர், நுளைச்சியர் மீன் பிடித்தும் உப்பு விளைவித்தும் வாழ்ந்தனர். மீனையும், உப்பையும் உள்நாட்டு ஊர்களுக்கு எடுத்துச் சென்று அவற்றிற்கு விலையாக நெல்லையும் பிறபொருள்களையும் பெற்றனர். இவர்கள் தோணிகள், நாவாய்கள் போன்றவற்றின் மூலம் கடலில் சென்று மீன்பிடித்தும் பின்பு கடலோடி வாணிகம் செய்தும் வந்தனர். பெண்கள் மீனையும், இறால் போன்றவற்றையும் உப்பிட்டு உலர்த்தினர். புன்னைமர நிழலிலிருந்து கடற்காக்கை போன்ற பறவைகளை ஓட்டினர்.

சுறாவும், முதலையும் கண்டு அஞ்சிய இம்மக்களின் மகளிர் தாழை, நெய்தல் மலரைக் கூந்தலில் சூடினர்; தழையுடை உடுத்தினர். சிறுகுடில்களில் வாழ்ந்தனர். கடல் நீரும் கேணி நீரும் இவர்கள்தம் நீராயின. பட்டினம், பாக்கம் எனப்படும் பகுதிகளில் வாழ்ந்த இம்மக்கள் நாவாய்ப்பறை அறைந்தனர். நெய்தல் யாழில் செவ்வழிப்பண்ணை இசைத்தனர். முழுமதி நாளன்று கடற்கரையில் சுறாக்கொம்பினை நட்டுப் பூமாலை சூட்டி நிலத்தெய்வம் ஆகிய வருணனை வணங்கினர்.

பாலை நிலத்து எயினர், புளிஞர், மறவர், மறத்தியர் பறந்தலை அல்லது கொல்குறும்பு என்னும் இடங்களில் வாழ்ந்தனர்.வளமற்ற பகுதியில் வாழ்ந்த காரணத்தால் வேட்டையாடியும், வழிப்பறி செய்தும் வாழ்ந்தனர். வலியற்ற யானை, புலி, செந்நாய் போன்ற விலங்குகளும், பருந்து, புறா, கழுகு போன்ற பறவைகளும் இருந்த இப்பகுதியில் இலுப்பை, பாலை, ஓமை, உழிஞை ஆகிய மரங்கள் உலர்ந்தும் கரிந்தும் இருந்தன. வறண்ட சுனை, கிணறு ஆகியவற்றின் நீரை உண்ட இம்மக்கள் நிறைகோள் பறை, சூறைகோள் பறை போன்றவற்றை முழக்கியும் பாலையாழில் இன்னிசை எழுப்பியும் வாழ்ந்தனர். இவர்கள் கொற்றவையினை வணங்கினர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *