BREAKING NEWS:-
Search

சங்க கால மக்களின் சமுதாய நிலை..!

தமிழகம் இயற்கை அமைப்பினையொட்டிக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகைப் பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மலையும் மலையைச் சார்ந்த இடத்தைக் குறிஞ்சி எனவும், காடும் காட்டைச் சார்ந்த இடத்தைக் முல்லை எனவும், வயலும் வயலைச் சார்ந்த இடத்தை நெய்தல் எனவும் அழைத்ததோடு உலகத்தையே நானிலம் என்று அழைத்தனர். பாலை எனப்படுபதற்கு முல்லை, குறிஞ்சி ஆகிய நிலப்பகுதிகள் கதிரவன் வெப்பத்தால் நீர்வளமற்றபோது வறண்டு காணப்படும் பகுதி என்று கண்டதால் அதனைத் தனியே நிலப்பகுதியாகக் கருதி நிலப்பாகுபாட்டில் கொண்டுவரவில்லை.

மலைப்பகுதியில் மிதந்து சிறந்து விளங்கும் குறிஞ்சிப் பூவால் அப்பகுதியும், காட்டுப் பகுதியில் பூத்துக் குலுங்கும் முல்லையால் அப்பகுதியும், வயல் பகுதியும் பூத்துக் குலுங்கும் மருத மரங்களால் அப்பகுதியும், கடலை ஒட்டிய கழிகளில் பூத்து மணம்பரப்பும் நெய்தற் பூவினால் அப்பகுதியும், வறண்ட நிலப்பகுதியில் செழித்து வளரும் பாலை மரங்களினால் அப்பகுதியும் பெயர் பெற்றன.

குறிஞ்சி நில மக்கள் வேட்டையாடிப் பிழைத்தனர். முல்லை நில மக்கள் ஆடு மாடு மேய்த்து நாகரிக வளர்ச்சியடைந்தனர். ஆயர் கைக்கோலை பின்பு அரசனின் செங்கோலாக மாறியது என்றும் அறிஞர் கருதுகின்றனர். மருதநில மக்கள் உழவுத் தொழிலை நீர்வளமுள்ள பகுதிகளில் செய்து, காடு கொன்று நாடாக்கி, குளந்தொட்டு வளம் பெருக்கி, நாடு நகரங்களை அமைத்து நாகரிகச் சிறப்புப் பெற்றனர். நெய்தல் நில மக்களோ மீன்பிடித்தும், பின்பு கலங்கள் மூலம் கடல் கடந்து வாணிகம் நடத்தியும் வாழ்வும் வளமும் பெற்றுச் சிறப்புற்றனர். பாலை நில மக்களோ ஆறலைத்து நாடோடிகளாக வாழ்ந்தனர்.

மக்கள் பிரிவு

தமிழகத்தில் வாழ்ந்த மக்கள் அவரவர் வாழ்ந்த திணை நிலத்திற்கு ஏற்பவும், செய்த தொழிலடிப்படையிலும் பெயர் பெற்றனர். அவ்வாறே அவ்வந் நிலத்தலைவர்களும் சிறப்புப் பெயர் பெற்றனர். குறிஞ்சி நில மக்கள் வேட்டுவர், குறவர், குறத்தியர் எனவும், குறிஞ்சி நிலத் தலைவன் வெற்பன், சிலம்பன், பொருப்பன் எனவும், குறிஞ்சி நிலத் தலைவன் மனைவி கொடிச்சி எனவும் அழைக்கப்பெற்றனர். முல்லை நிலத்தைச் சார்ந்த மக்கள் இடையர், பொதுவர், ஆயர், ஆய்ச்சியர் எனவும், முல்லை நிலத் தலைவர் அண்ணல், தோன்றல், குறும்பொறை நாடன் எனவும், நிலத் தலைவனின் மனைவி, மனைவி எனவும் அழைக்கப்பெற்றனர். மருத நில மக்கள் உழவர், உழத்தியர் எனவும், மருத நிலத்தலைவன் ஊரன், மகிழ்நன் எனவும் அத்தலைவனின் மனைவி, மனையோள் எனவும் அழைக்கப்பெற்றனர். நெய்தல் நில மக்கள் திமிலர், பரதவர், நுளையர், நுளைச்சியர் எனவும், நெய்தல் நிலத்தலைவன் சேர்ப்பன், திரையன், பரதவன் மடமகள் எனவும் அழைக்கப்பெற்றனர். பாலை நிலத்தில் வாழும் மக்கள் எயினர், எயிற்றியர் எனவும், பாலை நிலத்தலைவன் மீளி, விடலை எனவும் பாலை நிலத் தலைவனின் மனைவி எயிற்றி எனவும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைக்குரிய மக்களோடு அறிவிலும், ஆற்றலிலும் நாகரிகப்பண்பாட்டிலும் சிறப்புடையவர்களாக விளங்கிய அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் ஆகிய மக்களும் இருந்தனர்.

பண்டைத் தமிழகத்தில் காணப்படும் பாகுபாடுகள் தொழில் வகையால் அமைந்தவை. பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சாதிப்பாகுபாடு அன்று. பழந்தமிழகத்தில் உணவு, உறவுகொள்ளல் ஆகியவற்றில் வேறுபாடு காணும் சாதிமுறை இல்லை.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *