BREAKING NEWS:-
Search

கரும்புக்கு ஆதார விலை

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசு அறிவிக்கும். ஆனால், டிசம்பர் முடிந்து ஜனவரியும் வந்துவிட்ட நிலையிலும் கூட இந்த ஆண்டிற்கான ஆதார விலை அறிவிக்கப்படவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் கரும்புக்கான ஆதார விலையை நிர்ணயிக்க வேளாண்மைத் துறை அமைச்சர் தலைமையில் விவசாய சங்கங்கள், கரும்பு ஆலை நிர்வாகத்தினர், அரசு அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், கரும்பு விவசாயிகள், ஆலை நிர்வாகத்தினருக்கு உள்ள நடைமுறை பிரச்னைகளை தெரிவிப்பார்கள். அதுகுறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்படும். பின்னர் இரு தரப்பினரும் ஏற்கும் வகையில் கரும்புக்கு ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், அதிமுக அரசு முத்தரப்பு கூட்டங்களை நடத்தும் வழக்கத்தை தலைமுழுகிவிட்டது. விவசாயிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினரை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்து விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டது. அரசு நிர்ணயிக்கும் விலையை விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்தினர் தர முன்வருவதில்லை. இதனால், பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்.

ஏற்கனவே, அரசு அறிவித்த, குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க முடியாது எனக் கூறி ஆலை நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 2014-15ம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவம் தொடங்கி 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையிலும், தமிழக அரசு இந்த ஆண்டுக்குரிய கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை அறிவிக்கவில்லை. மாநில அரசின் பரிந்துரை விலை அறிவிக்கப்படாததால், பழைய விலையான டன் ஒன்றுக்கு ஸீ 2,550தான் வழங்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் 2,300 முதல்  2,400 வரை மட்டுமே வழங்கி வருகின்றன. மத்திய அரசு அறிவித்த விலையான டன் ஒன்றுக்கு ஸீ 2,200 வழங்க தமிழக அரசின் சர்க்கரைத் துறை இயக்குனர், சர்க்கரை ஆலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலையை டன் ஒன்றுக்கு  3,500 என நிர்ணயிக்க வேண்டும். உடனடியாக முத்தரப்புக் கூட்டத்தைக் கூட்டி, கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலையை அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ஸீ 200 கோடியை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லும் பகலும் பாடுபட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானதுதான். அவர்களின் கோரிக்கையை ஏற்று முத்தரப்பு கூட்டத்தை கூட்டி கரும்புக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய காலம் தாழ்த்தாது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.

************************* Thanks to www.dinakaran.com ************************

karumbu_1687486g




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *