BREAKING NEWS:-
Search

கடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள்  50 சதவீதமாக  அதிகரிப்பு..!

சீரற்ற வாழ்க்கை முறை, மாறும் உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக, கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை நீரிழிவினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஏற்படும் மரணங்களுக்கான காரணங்களில் நீரிழிவு நோய் ஏழாம் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்களில் இதய ரத்த ஓட்டக் குறைபாடு முதல் இடத்திலும், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இரண்டாம் இடத்திலும், செரிபரோவாஸ்குலர் நோய் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

2015-ஆம் ஆண்டு 3,46,000 பேர் நீரிழிவு நோயால் இந்தியாவில் உயிரிழந்துள்ளனர். இது இந்தியாவில் அந்த ஆண்டு ஏற்பட்ட மரணங்களில் 2.7 சதவீதமாகும். 1990-ஆம் ஆண்டிலிருந்து இந்த சதவீதமானது, ஆண்டுதோறும் 2.7 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில்  ஒரு லட்சம் பேரில் குறைந்தது 26 பேர் நீரிழிவினால் மரணமடைகிறார்கள்.

தற்போது இந்தியாவில் 69.1 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வருகிறார்கள். உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக நீரிழிவு நோயாளிகளை கொண்டிருப்பது இந்தியாதான். இவர்களில் 36 மில்லியன் மக்களுக்கு, தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது. 20 முதல் 76 வயதுடையவர்களில், 9 சதவீதம் பேர் நீரிழிவு நோயினால் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நீரிழிவு நோய் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை மட்டும் பாதிப்பதில்லை. மாறாக உடல் முழுவதிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு இதய நோய்கள், வலிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கண் பார்வை குறைபாடு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் போன்றவையும்  ஏற்படுகின்றன.

மற்ற நாடுகளில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர்  60 வயதை அடைந்தவர்கள். ஆனால் இந்தியாவிலோ  40-59 வயதுக்குட்பட்டோர்  இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ”கடந்த பத்து ஆண்டுகளில்  இந்தியர்களிடையே  நீரிழிவு நோய் ஏற்படுத்திய தாக்கத்தினால், மக்கள் வேலைத்திறன் குறைந்துள்ளது.” என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக மற்றும் மரபணு காரணங்களினால் இந்தியர்கள் மிக எளிதாக நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுவிடுகின்றனராம். இதன்படி இந்தியர்கள் பார்க்க ஒல்லியான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும், அவர்களின் உள்ளுறுப்புகளில் கொழுப்பு அதிகளவு படிந்து காணப்படுகிறதாம்.

இதன் காரணமாக தொப்பை, இன்சுலின் குறைபாடு, கெட்ட கொழுப்புகள் ஆகியவற்றால் இந்தியர்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றனராம். மாறி வரும் வாழ்க்கை முறையினால், இந்தியர்களின் உடல் உழைப்பு குறைந்தது, அதிக மாவுச்சத்துள்ள உணவுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை இந்தியர்கள் அதிக அளவில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

சர்க்கரை நோய் காரணமாக மாதந்தோறும் நகர்ப்புறத்தில் இருக்கும் ஒருவர்  சுமார் 10,000 ரூபாய் மருந்துகளுக்காக செலவளிக்கிறார் என கணக்கிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இந்த செலவு 6,260 ரூபாயாக உள்ளது. இந்த செலவுத் தொகை  நகர்ப்புற ஏழைகளின்  ஊதியத்தில் 34 சதவீதமாகவும், கிராமப்புற ஏழைகளின் ஊதியத்தில் 27 சதவீதமாகவும் உள்ளது.

வரும் 2040-ஆம் ஆண்டு இந்தியாவில் 20 முதல் 79 வயதுக்குட்பட்டோரில் சுமார்  123 மில்லியன் பேர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. போலியோ, காச நோய் போன்ற நோய்களுக்காக  எப்படி தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோ, அதே போல நீரிழிவு நோய்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் ஹெச்.ஐ.வி, காசநோய், மலேரியா போல முக்கிய உயிர்கொல்லி நோயாக நீரிழிவு நோய் உருவெடுக்கும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நன்றி:

http://www.indiaspend.com/cover-story/50-rise-in-diabetes-deaths-across-india-over-11-years-32711




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *