BREAKING NEWS:-
Search

ஐந்து புதிய ரக திறன்பேசிகளுடன் இந்தியாவில் களமிறங்கும் டெக்னோ நிறுவனம்..!

உலகில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் திறன்பேசி உபயோகிப்போர் கொண்டுள்ள நாடாக இந்தியா இருக்கிறது. எனவே இங்கு இருக்கக் கூடிய திறன்பேசி சந்தையில் லாபம் சம்பாதிக்க, உலகின் பல்வேறு நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் உள்ள பல்வேறு மின்னணு நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தொழிலை துவங்க ஆர்வம் காட்டுகின்றன.

இந்த வரிசையில் சீனாவைச் சேர்ந்த ’டிரான்சன் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம், தனது புதிய 5 வகையான திறன் பேசி ரகங்களுடன் இந்திய செல்பேசி சந்தையில் கால்பதிக்க இருக்கிறது. தனது நிறுவன திறன்பேசிகளுக்கு ‘டெக்னோ’ என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது.

இந்த ஐந்து திறன்பேசிகளும் “ஐ” என்ற வரிசையில் வெளியாக உள்ளன. அதன்படி ஐ 5, ஐ 5 ப்ரோ, ஐ 3 ப்ரோ மற்றும் ஐ 7 ஆகிய திறன்பேசிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் நான்கு ரக திறன்பேசிகள், வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளன. ஐ 7 திறன்பேசி மட்டும், வரும் மே மாதம் விற்பனைக்கு வரும்.

இந்த திறன்பேசிகள் அனைத்திற்கும் 7,990 ரூபாய் முதல் 14,990 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ”இந்தியா எங்களுக்கு மிக முக்கியமான சந்தை, நாங்கள் வெறும் ஒரு திறன்பேசியை மட்டும் வெளியிடவில்லை. மொத்தம் ஐந்து வகையான திறன்பேசிகளை வெளியிட உள்ளோம். இதிலிருந்தே இந்திய சந்தையில் நாங்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எங்கள் நிறுவன திறன்பேசிகள் அனைத்தையும், இந்தியர்களின் தேவைகளை மனதில் வைத்து உருவாக்கியுள்ளோம்.” என டிரான்சன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பல வெளிநாட்டு திறன்பேசி நிறுவனங்கள், தங்கள் திறன்பேசிகளை இணையம் வாயிலாக விற்பனை செய்து வரும் நிலையில், டெக்னோ திறன்பேசிகள் முழுவதும் விற்பனை நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்காக நாடு முழுவதும் உள்ள 129 விநியோகஸ்தர்களிடம் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

நன்றி:

http://indianexpress.com/article/technology/mobile-tabs/after-itel-transsion-holdings-brings-tecno-brand-to-india-debuts-i-series/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *